Monday, January 26, 2015

பீடியும் பால்யமும்.

அப்போது எனக்கு ஒரு 11 வயதிருக்கும். இப்படித்தான் தொடங்குகிறது எனக்கும் புகைக்குமான தொடர்பு. 21-ம் நூற்றாண்டு தொடங்க எத்தனித்த நேரம். அப்போது, எங்களுக்கு பெரிதாக நேரவிரயம் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை. கைப்பேசி, தொலைக்காட்சி,கணினி போன்றவை பிரபலமடையாத கிராமம். கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்.. இதுதான் சகலமும். காலையில் ஆரம்பித்தால், மதியம் தொடர்ந்து மாலை, கதிரவன் கண்ணை மூடும் வரை தொடரும். அதுபோக என்னுடன் சேர்ந்த சில எலக்ட்ரானிக் நண்பர்களும் உண்டு. எங்களின் வேலை, சிறு சிறு மின்மோட்டார்களைத் திருடியோ, வாங்கியோ பேட்டரி கனெக்ஷன் கொடுத்து, அதன் முனையில் ஒரு பனை/தென்னை ஓலையை சொருகி, மின்விசிறி போல ஓடவிடுவது.

அப்படியான ஒரு மின் மோட்டார் ஓட்டத்தின்போதுதான், ஒரு சிறு பிரச்சினை வந்தது. அது, ஒரு ஒயர் கட் ஆனதால் வந்த பிரச்சினை. இங்கேதான் உண்மையில் கதை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னுரை இல்லாமல் எழுத முடியாதல்லவா?. கதைக்கு வருவோம்.

பிய்ந்து போன ஒயரை ஒட்ட வைக்க ஒரே வழி, சால்டரிங் பண்ணுவது. சால்டரிங் செய்யும் கருவியும், அதற்குத் தேவையான மின்சாரமும் எங்களின் பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் என் சித்தப்பா வீட்டில் மட்டுமே உண்டு. இதற்கு முன்பெல்லாம் சால்டரிங் பண்ணும் கருவி, எப்போதும் மாடாக்குழியில்தான் இருக்கும். ஆனால் இன்றோ, சலவுப்பெட்டியில் வைத்துவிட்டார்கள். வீடு முழுவதும் தேடி, கடைசியாகக் கண்டுபிடிக்கும் வரை, இருக்குமிடம் தெரியாதல்லவா? தேடினோம் தேடினோம் ஒருமணி   நேரமாகத் தேடினோம். கடைசியில் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி பிரச்சினையில்லை, எப்போது கேட்டாலும், சலவுப்பெட்டியில் இருக்கிறதென்று சொல்லிவிடலாம்.

சரி இப்போ அதுக்கென்ன என்று சொல்வது கேட்கிறது. விஷயத்துக்கு வருவோம். தேடிப்பிடித்தாயிற்று. பற்ற வைக்க வேண்டும். அதற்கு உருகும் கம்பி வேண்டும். இனிமேதான் கதை ஆரம்பிக்கப்போகிறது, கவனியுங்கள்.

அதைத்தேடும்போதுதான், அதே சலவுப்பெட்டியில் ஒரு பீடி கிடைக்கிறது. ம்ம்ம் கதைக்கு வந்தாயிற்று. தேடியவர்கள் மூன்றுபேர். பீடியைப் பகிர வேண்டுமல்லவா?. ஆளுக்கொரு முறை இழுத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. ஆனால் அடுத்த தேவை அதுவல்ல, அதைப்பற்ற வைக்க தீப்பெட்டியும், பற்ற வைத்தபின் இழுக்க ஒரு மறைவிடமும்தான். வாழுமிடத்தில் மறைவுடம் பிடிப்பதா கடினம்?. பிடித்தாயிற்று. பற்றவும் வைத்தாயிற்று. முதல்முறை அதனை இழுக்கும்போது தெரியாது, புகையை உள்ளே இழுத்து, நுரையீரலை ஓட்டை போட வேண்டுமென்பது. வெறும் வாயில் இழுத்து இழுத்து ஊதியும் விட்டோம். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆகட்டும், பத்தவில்லை ஒற்றைப்பீடி. மூவரின் சோப்புகளையும் தொலாவி ஒரு எட்டணா எடுத்தாயிற்று. நேரே கடைக்குப் போவது பெரிய விஷயமில்லை. கிராமமாயிற்றே!! அத்தனை கடைக்காரர்களும் தெரிந்தவர்கள். எப்படி வாங்குவது? இருக்கவே இருக்கிறார் சித்தப்பா. வாங்கிவரச்சொன்னார் என்று பழியைப்போட்டு வாங்கியும் விட்டாயிற்று.

அப்போது உடன் சேர்ந்தவன் தான் என் புகைக்குருவாகப் போகிறான் என்று தெரியவில்லை. எட்டணாவிற்குக் கிடைத்த மூன்று பீடிகளுடன் புகைக்குருவையும் சேர்த்துக்கொண்டு மறைவிடத்துக்கு வந்தாயிற்று. பற்ற வைத்தபிறகுதான் சொல்லிக்கொடுக்கிறான் நான்காவது நண்பன், எப்படி இழுக்க வேண்டுமென்று.

"மொதல்ல, பீடிய பத்த வைடா. அப்பறமா, லேசா பொகய வாயில இழு"

"இழுத்திட்டியா?"

"ம்ம்ம்டா"

"இப்ப, அப்பிடியே வாயத்தொறந்து, வேகமா உள்ள இழுடா"

இரும ஆரம்பித்தேன். அப்போது இரும ஆரமபித்தது, இப்போதுவரை தொடர்கிறது.

ஆக, யாரும் தானாக கெட்டுப்போவதில்லை. கெடுப்பவர்கள் யாரும் உள்நோக்கத்தோடு கெடுப்பதில்லை.

Sunday, April 8, 2012

கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய




Find License Keys of your installed softwaresகணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். 

வைரஸ் காரணமாக கணிணி செயலிழக்கும் போதோ அல்லது கணிணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண் (Serial No) எங்கே என்று தெரியாமல் விழிப்பர். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
Find License Keys of your installed softwaresஇந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.

எளிமையான இந்த மென்பொருள் கணிணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம். பென் டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download LicenseCrawler
Thanks to ponmalas.blogspot.com for sharing this